பெண்ணை கொலை செய்த கரப்பான் பூச்சி : அதிர்ச்சி தகவல்!

கரப்பான் பூச்சியை கண்டு பயப்படும் பெண்களைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றதில் ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். இது ஒரு பெண்ணை கிண்டலடிக்கும் செய்தியல்ல, நம் எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்தியாகும்.

இனி செய்திக்கு வருவோம் -

சிலவாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஒரு பெண் சமையல் செய்து கொண்டிருந்த போது தீப்பற்றியதில் மரணமடைந்தார். இது அவரது அஜாக்கிரதையால் ஏற்பட்ட தீவிபத்து என்றே பலரும் நினைத்தனர். ஆனால் உண்மை அதுவன்று.

அவரது கேஸ் அடுப்பினருகே தீப்பற்றி எரிந்த நிலையில் கரப்பான் பூச்சியை விரட்டும் 'ஹிட்' மருந்து தெளிப்பான் கிடந்திருக்கிறது. விசாரணையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

அப்பெண் கேஸ் அடுப்பில் வழக்கம் போல் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சமையல் மேடை அருகே கரப்பான் பூச்சிகள் இருப்பதைக் கண்டதும் கரப்பான்களை விரட்டும் 'ஹிட்' தெளிப்பு மருந்தை எடுத்து வந்து அடித்துள்ளார்.

கரப்பான் பூச்சி கேஸ் அடுப்பினடியில் ஓட, அங்கும் இந்த மருந்தை அடித்துள்ளார். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய அப்பெண்மணி வலியால் அலற, அவரைக்காப்பாற்ற அவரது கணவர் ஓடி வந்திருக்கிறார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் சிக்கிய அப்பெண்ணின் உடல் 65 % சதவீதம் கருகிப் போன நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்தார். அப்பெண்ணை காப்பாற்றச் சென்ற அப்பெண்ணின் கணவரும் இத்தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இனி தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை பார்ப்போம் கரப்பான் பூச்சியை ஒழிக்கும் தெளிப்பான் மருந்துகள் கெரோசீன் மற்றும் சில வேதிச்சேர்மங்கள் சேர்க்கப்பட்டதின் கலவையாக உருவாக்கப்பட்டு, அதை டின்களில் அடைத்து விடுகின்றனர்.

அதனை பயன்படுத்தும் போது காற்றில் அதிக வேகத்தில் சிறுசிறு துளிகளாக பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த மருந்தின் சேர்மங்கள் அனைத்தும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகும். இதனை யாரும் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. இது குறித்து மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.

"வீட்டில் கரப்பான் தொல்லையா..? 'ஹிட்' அடியுங்கள்... மறைந்திருக்கும் கரப்பான்களையும் தேடிப்பிடித்து கொல்லும்..." என டி.வி.யில் வரும் விளம்பரங்களால் ஈர்க்கப்படும் நுகர்வோர்கள், இதன் தீமைகளை பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.

விளம்பர நிறுவனங்களும் சரி, மருந்து நிறுவனங்களும் சரி இது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துவதில்லை.

இது போன்ற எளிதில் தீப்பற்றும் நுகர்வோர் பொருட்கள் குறித்து, அப்பொருளை அடைத்து வைக்கும் டப்பாக்களிலும், விளம்பரங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் பெரிதான எழுத்துக்களில், அதனதன் வட்டார மொழிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி இதுபோன்ற கரப்பான், கொசு மருந்து தெளிப்பான்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். தீயினருகே இவற்றை பயன்படுத்தாதீர்கள்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!