புறாக்களுக்கு கணக்குப்போடும் திறமை உண்டு : நம்பமுடிகிறதா?

குடத்தில் இருக்கும் குறைவான தண்ணீரை குடிக்க, அதில் கற்களை தூக்கி போட்டு தண்ணீர் மேலே வரவைத்து குடிக்கும் காக்கையை பற்றி படித்திருக்கிறோம். ஆற்று நீரில் விழுந்து தத்தளித்து கொண்டிருக்கும் எறும்பை காப்பாற்ற, ஒரு அரச மர இலையை தூக்கி போடும் புறாவை பற்றியும் படித்திருக்கிறோம். ஆனாலும் நாம் பறவைகளை ஐந்தறிவுள்ள உயிரினங்களாக கொஞ்சம் இளக்காரமாகத்தான் பார்க்கிறோம்.


ஆனால், `பறவைகளும் நம்மைப்போல புத்திசாலிகள் தான்' என்கின்றன சமீபத்திய சில ஆய்வுகள். உதாரணமாக, வளைந்து போன பேப்பர் கிளிப்புகளை ஆயுதமாக மாற்றும் திறனுள்ள கேளடோனியன் காக்கைகள் மற்றும் ஜாடிக்குள் இருக்கும் குறைவான தண்ணீரை மேலே கொண்டு வர, அதில் கற்களை தூக்கி போடும் `ரூக்ஸ்' (ஒரு வகையான காக்கை இனம்) காக்கைளைச் சொல்லலாம்.

இதுவரை, நாம்தான் கணக்கில் புலி என்று நினைத்துக்கொண்டிருந்தோம். இப்போது நமக்கு போட்டியாக புறாக்களும் களத்தில் குதிக்கின்றன என்கிறார் நிïசிலாந்திலுள்ள ஒடாகோ பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேமியன் ஸ்கார்ப்.

தேனீக்கள் உள்ளிட்ட பல உயிரினங்களுக்கு எண்களை புரிந்துகொள்ளும் சிறு திறன் இருப்பதாக ஆய்வு கள் சொல்கின்றன.

கடந்த 1998 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டிïக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ரீசஸ் இன குரங்குகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் இத்தகைய மேலதிக கணித திறனை உருவாக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டது. இதுபோல புறாக்களுக்கும் கணித திறன் இருக்கிறதா என்று பரிசோதிக்க எண்ணினார் ஆய்வாளர் டேமியன் ஸ்கார்ப்.

புறாக்களின் கணித திறனை கண்டறிய, ஒன்று, இரண்டு அல்லது மூன்று பொருட்கள் கொண்ட குழுக்கள் புறாக்களுக்கு திரையில் காண்பிக்கப்பட்டது. அந்த குழுக்களை ஒன்று முதல் அதிக எண்ணிக்கை வரை அலகால் கொத்தி அவற்றால் வரிசைப்படுத்த முடிகிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனைக்காக புறாக்கள் சுமார் ஒரு வருட காலம் பயிற்சி எடுத்துக்கொண்டன.

இத்தகைய திறன் புறாக்களுக்கு அடிப்படையிலேயே இருக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், பொருட்களின் நிறம், வடிவம் அல்லது அளவு இவற்றின் அடிப்படையில் குழுக்களை இனம் பிரிக்காமல், எண்ணிக்கை அடிப்படையில்தான் இனம் பிரித்து சொல்கின்றன என்பதை திட்டவட்டமாக, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், முக்கோணம், செவ்வகம் மற்றும் முட்டை வடிவம் உள்ளிட்ட பல வடிவங்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புறாக்களும் கணக்கில் கெட்டிதான் என்று நிரூபிக்க இதுவும் போதவில்லை. அதனால், அவற்றுக்கு அறிமுகமான எண்களான ஒன்று, இரண்டு மற்றும் மூன்றை தவிர்த்து அதைவிட பெரிய, புறாக்களுக்கு அறிமுகம் இல்லாத எண்கள் உள்ள குழுக்கள், தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் வண்ணம் திரையில் காண்பிக்கப்பட்டது.

இந்த ஆய்வில், சிறியது முதல் பெரியது வரையிலான எண்ணிக்கை உள்ள குழுக்களை புறாக்கள் சரியாக கொத்தின. ஆக, புறாக்கள் வெவ்வேறு எண்ணிக்கை உள்ள குழுக்களை குத்துமதிப்பாக கூட கொத்தி இருக்கலாம் என்று யாரும் சொல்ல முடியாது என்று அடித்துச் சொல்கிறார் டேமியன்.

அப்புறமென்ன, சரியாக கணக்கு போடும் ரீசஸ் குரங்குகளை போல புறாக்களும் கணக்கில் புலியாகத்தான் இருக்கின்றன என்பது தெளிவானது. ஆனால், சுலபமான கேள்விகளுக்கு சரியான விடை எழுதி சற்று கடினமான கேள்விகளுக்கு விடை எழுத திணறும் நம்மைப்போலவே புறாக்களும் திணறியிருக்கின்றன.

உதாரணமாக, இரண்டு குழுக்களுக்கு இடையிலான எண்ணிக்கை 2 மற்றும் 8 என பெரிதான வித்தியாசத்துடன் இருந்தபோது சரியாக கணக்கு போட்டன புறாக்கள். ஆனால், குழுக்களுக்கு இடையிலான எண்ணிக்கை வித்தியாசம் 5 மற்றும் 6 ஆக இருந்தபோது சொதப்பிவிட்டன. ஆக மொத்தத்தில், புறாக்களும் கணக்கு போடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

`அட, குரங்குகள் கூட கணக்கில் புலிதான் என்பது ஆச்சரியமாக இருக்கிறதே என்று எண்ணினேன். குரங்குகளைப் போல புறாக்களும் கணக்கில் கெட்டிதான் என்று தெரியவந்த போது அசந்து போனேன்' என்கிறார் குரங்குகளின் கணித திறனை ஆய்வு செய்த நரம்பியல் ஆய்வாளர் பிரான்னான்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!