எம்.வி.சன்.சீ கப்பல் ஏற்ப்பாட்டாளர் தயாகரன் பிரான்சில் கைது!

எம்.வி.சன்.சீ.கப்பலில் கனடாவிற்கு இலங்கைத்தமிழ் அகதிகளை சட்டவிரோதமான முறையில் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் பரவலாக தேடப்பட்டுவந்த தயாகரன் மார்க்கண்டு என்ற தமிழர் பிரான்சில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. கைதான அவர் கனடாவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார். கனேடிய நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 பேர் அடங்கிய புகலிடக் கோரிக்கையாளர் குழுவொன்றை கனடாவிற்கு எம்.வீ. சன் சீ என்ற கப்பல் மூலம் அனுப்பி வைத்த சம்பவத்தின் பின்னணியில் தயாகரனுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு எதிராக கனேடிய சமஸ்டி காவல்துறை, கடந்தமாதம் அனைத்துலக பிடியாணையை பிறப்பித்துள்ளது. தயாகரன் மார்க்கண்டு தற்போது பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவரை கனடாவிடம் ஒப்படைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைசர் விக் ரொவ்ஸ் மற்றும் குடிவரவு அமைச்சர் ஜாசென் கென்னி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.

புதியவர்களை கனடா எப்போதும் வரவேற்கும் என்ற போதிலும் நிதியியல் நன்மைகளுக்காக குடிவரவு குடியகழ்வுச் சட்டங்களை மீறிச் செயற்படுவோரை அனுமதிக்க முடியாது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தயாகரன் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஈடுபட்டதாக கனேடிய அதிகாரிகள் இந்த மார்ச் மாதம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!