டைட்டானிக் கப்பலில் வயலின் கண்டெடுப்பு

1997-ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டாக ஓடிய படம் ‘டைட்டானிக்’. உலக புகழ் பெற்ற டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் உள்பட பலரும் நடித்த படம். இதில் ஒரு காட்சி வரும். கப்பல் உடைய தொடங்கிய பிறகு, பயணிகள் பீதியுடன் இங்கும் அங்கும் ஓடுவார்கள்.

உயிர் பிழைப்பதற்காக மீட்பு படகுகளில் ஏறுவார்கள். அப்போதுகூட, கப்பலின் பேண்ட் வாத்திய குழுவினர் பதற்றப்படாமல் வயலின் வாசிப்பார்கள். கப்பல் மூழ்கும் வரை அவர்களது இசை தொடரும். இது வெறும் காட்சியல்ல. உண்மை. பேண்ட் வாத்திய கலைஞர்கள் 8 பேர் கடைசி வரை இசைக் கருவிகள் வாசித்ததாக அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அப்போது மூழ்கிய வயலின் தற்போது கிடைத்திருக்கிறது.


அட்லான்டிக் கடலில், டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி சமீபத்தில் டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்டன் பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் புறப்பட்டது.

உலகிலேயே மிக பிரமாண்டமான முதல் சொகுசு கப்பலான டைட்டானிக், தனது முதல் பயணத்திலேயே வடக்கு அட்லான்டிக் கடலில் மிகப்பெரிய பனிப்பாறையில் 15-ம் தேதி மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் பயணம் செய்த 2,223 பேரில் 1517 பேர் உயிரிழந்தனர். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் விபத்தாக இன்றளவும் உள்ளது.

கடலில் மூழ்கிய கப்பல் மற்றும் விபத்து குறித்து பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆய்வின்போது கப்பலில் இருந்து பல அரிய பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன. இப்படி கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 5000 பொருட்களை வரும் ஏப்ரலில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அமெரிக்காவின் நியூயார்க் குர்ன்சே என்ற பிரபல ஏல நிறுவனம்.

ஆனால், அதே நேரத்தில் ஏலத்தில் எடுக்கும் பொருட்களை நன்கு பராமரிக்க வேண்டும், அவ்வப்போது பொதுமக்கள் பார்வைக்கு அவற்றை வைக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. இந்நிலையில் டைட்டானிக் கப்பலில் இருந்து அரிய மாடல் வயலின் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்கப்பலில் இருந்த பேண்ட் மாஸ்டர் வாலஸ் ஹர்ட்லி பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வாலஸ் ஹர்ட்லி என்ற இசைக் கலைஞர், தனது வயலினை அணைத்த நிலையிலேயே கடலில் மூழ்கினார்.

அந்த நிலையிலேயே அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வயலின்தான் தற்போது கிடைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரிடம் இந்த வயலின் பல ஆண்டு காலமாக இருந்துள்ளது. வாலசுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் மரியா ராபின்சன், டைட்டானிக் விபத்து நடந்த சில ஆண்டுகளில் இதை தன்னிடம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். டைட்டானிக் வயலின் குறித்த இதர தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!