மிகப் பெரிய பளிங்கு கல் ஓவியம்: இந்தியப் பெண் உலக சாதனை

பளிங்கு கற்களை இணைத்து, மிகப் பெரிய ஓவியம் வடிவமைத்து இந்தியப் பெண் உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பிறந்து தற்போது பிரிட்டனில் வடிவமைப்பு நிறுவனம் தொடங்கி நடத்திவரும் கனிகா என்ற பெண் இந்த ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.  ஓமனின் முன்னாள் அரசர் சுல்தான் கபாஸ் பின்னின் 40-வது நினைவு தினம் கடந்த நவம்பர் மாதம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி அவர் இந்த ஓவியத்தை வடிவமைத்தார். "மன்னரின் புகைப்படம் ஒன்றை கொடுத்தனர். அதை வைத்து பல வண்ண கற்களை தேடி அதன் மூலம் இந்த ஓவியத்தை வடிவமைத்தோம்' என்று கனிகா கூறினார்.


பிரிட்டனில் இவர் ஓவியம் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பஹ்ரைனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மன்னரின் ஓவியம் பளிங்கு கல்லில் வடிக்கப்படவேண்டும் என கனிகாவின் நிறுவனத்தை அணுகியது. இது குறித்து பஹ்ரைன் நிறுவனத்தைச் சேர்ந்த தெவான் என்பவர் கூறியது: "இந்த பளிங்கு கல் ஓவியம் வடிவமைக்கப்பட பல வண்ணத்தில் கற்கள் தேவைப்பட்டன. புகைப்படத்தில் உள்ளதுபோல ஓவியம் வடிவமைக்கப்பட மிகவும் உழைக்க வேண்டி இருந்தது. தலைப்பாகைக்கு கருஞ்சிவப்பு நிறத்திலும், தோல், உடை உள்ளிட்ட பகுதிகளை வடிவமைக்க இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறம் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் பளிங்கு கற்கள் தேவைப்பட்டன. இதற்காக கனிகா மலைப்பகுதிகளுக்கு அவரே சென்று கற்களை தேர்ந்தெடுத்தார். பின்னர் இந்த கற்கள் ஒரு சதுர செ.மீ. அளவுக்கு வெட்டப்பட்டன.



இறுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 தனித்தனி துண்டுகளாக வெட்டப்பட்டு 90 வெவ்வேறு நிறங்களில் பாலிஷ் போடப்பட்டன. பின்னர் அவை ஒன்றிணைக்கப்பட்டு மன்னரின் பளிங்கு கல் ஓவியம் வடிவமைக்கப்பட்டது. 4 மாதங்கள் நடைபெற்ற இந்த ஓவிய வடிவமைப்புப் பணியில் 15 கலைஞர்கள் ஈடுபட்டனர். இந்த ஓவியத்தின் உயரம் 8 மீட்டர். அகலம் 5 மீட்டர். உலகிலேயே மிகப் பெரிய பளிங்கு கல் ஓவியம் இதுதான். இந்த ஓவியம் இப்போதைய மன்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதை அவர் எங்கு வைப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை.


 அநேகமாக பொது மக்கள் ரசிக்கும் வகையில் ஏதேனும் பொது இடத்தில் இதை வைக்க ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார் அவர்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!